Monday, July 24, 2006

$ சம்பள உயர்வு [Touching]

சீக்கிரம் வாடா.. மணி பத்தரையாச்சு. காஃபி டைம். செல்போனில் கூப்பிட்டான் நட்டு என்கிற நடேசன்.
இப்போ தாண்டா வந்தேன் ஆபீசுக்கு. நீ போ நான் அப்புறமா வரேன். ஜெயராஜ் தயங்கினான்.
‘டேய் வெண்ணை. நீ எண்ணிக்குதான் சீக்கிரமா வந்திருக்கே. அதான் இப்போ ஆஃபீசுக்கு வந்தாச்சுல்ல, கீழே வா காண்டீனுக்கு.. முதல்ல காஃபி சாப்பிட்டு ஒரு தம் போட்டுட்டு அப்புறமா பாத்துக்கலாம் உன்னோட வேலையை’ நடேசன் தொடர்ந்தான்.
நடேசனுடைய தொந்தரவு பொறுக்க முடியாத ஜெயராஜ், தனக்கு முன்னால் இருந்த கணிப்பொறியை லாக் செய்து விட்டு கேண்டீனுக்குப் புறப்பட்டான்.காண்டீன் அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் இருந்தது. ஜெயராஜ் மூன்றாவது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.
எங்கும் கணிப்பொறிகள். வேவ்வேறு நிறங்களில் எதையெதையோ தங்கள் முகத்தில் ஓடவிட்டுக் கொண்டிருக்க, ஒவ்வொரு கணிப்பொறிக்கு முன்னாலும் ஒவ்வொரு கணிப்பொறியாளர். பெரும்பாலானவர்களுடைய வயது இருபதுக்கும் முப்பந்தைந்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்தது ஒரு இனிய ஆச்சரியம். விரல்களுக்குக் கீழே இருக்கும் விசைப்பலகையில் விரல்கள் ஒரு வீணை வாசிப்பவனில் தாளத்தோடு அங்கும் இங்குமாய் அலைய மானிட்டரில் வரிகள் ஓடின. ஏதேதோ மென்பொருட்கள், ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட வெவ்வேறு பணிகள் என்று சுறுசுறுப்பாக இருந்தது அலுவலகம். எதிர்பட்ட நபர்களிடமெல்லாம் ஆங்கிலத்தில் ஒரு விசாரிப்பை வழங்கிவிட்டு கீழ்த்தளம் நோக்கி நடந்தான் ஜெயராஜ்.
காண்டீன் பரபரப்பாய் இருந்தது. தேனீர் தயாரித்துத் தரும் இயந்திரத்துக்குக் கீழே பிளாஸ்டிக் குவளையை வைத்து ஏதோ ஒரு பட்டனை அமுக்கி காபியை நிறைத்தான் ஜெயராஜ். ஓரமாய் இருந்த மேஜையில் நடேசன், ஸ்ரீநாத்.
நிறைந்து வழியும் காஃபியை விரல்களில் வழியவிடாமல் பூனை தன் குட்டியைத் தூக்கும் லாவகத்தோடு விரல்களின் நுனிகளால் பற்றி மேஜையை வந்தடைந்தான் ஜெயராஜ்.
ஆபீஸ்க்கு இப்போ தான் வந்தேன். அதுக்குள்ள என்னை இழுத்துப் புடிச்சு காண்டீனுக்கு வர வெச்சுட்டீங்க. இன்னும் மெயில்களைக் கூட வாசித்துப் பார்க்கல.சொல்லிக்கொண்டே அமர்ந்தான் ஜெயராஜ். அவனுக்கு முன்னால் மேஜையில் ஏதோ ஒரு ஆங்கில மாத இதழ் முன்னட்டையில் புரியாத தொழில்நுட்பப் புகைப்படத்தோடும், வழவழப்பான தன்மையோடும் சிரித்தது.
இந்த கணிப்பொறி சர்க்கியூட் களுக்கும் நவீன ஓவியங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும். இரண்டுமே ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. கணிப்பொறியில் நாள் முழுவதும் வேலை செய்யும் மனிதர்களில் தொன்னூற்று ஒன்பது சதவீதம் பேருக்கு கணிப்பொறிக்கு உள்ளே இருக்கும் விஷயங்கள் ஒன்றுமே தெரியாது. அதேபோல கணிப்பொறி தயாரிக்கும் மக்களால் கணிப்பொறியில் வேலை செய்யவும் முடிவதில்லை. அவரவர் வேலை அவரவர்க்கு. அவ்வளவே.
‘காலைல வந்ததும் எல்லா செய்தித் தாள்களையும் இண்டர் நெட்ல வாசிக்க வேண்டியது. அப்புறம் அப்படியே பத்தரைக்கு காபி, பதினொன்னறை வரைக்கும்காண்டீன்ல அரட்டை அடிக்க வேண்டியது அப்புறம் மேல போயி கேள்பிரண்ட்ஸ் அனுப்பியிருக்கிற மெயில்களை வாசிக்க வேண்டியது, பன்னிரண்டரைக்கு சாப்பிட வரவேண்டியது. சாப்பிட்டு தம் போட்டு முடிக்கும்போ ஒண்ணரை. அப்புறம் ஒண்ணரையில இருந்து மூணரை வரைக்கும் தூங்கிட்டே ஏதாவது மெயில்ஸ் டைப்பண்ண வேண்டியது, அல்லது சாட் பண்ண வேண்டியது. மூணரைக்கு மறுபடியும் காபி. இப்போ போதாக்குறைக்கு ஐஞ்சரைக்கு மேஜைப்பந்து, கேரம், ஷட்டில் ஏதாவது விளையாடிட்டு வீட்டுக்குப் போகவேண்டியது.. இது தானே நீ பண்றே. இதுல எதுக்கு படம் காமிக்கிறே’ நடேசன் ஜெயராஜை வம்புக்கு இழுத்தான்.
‘சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டற மாதிரி அதுக்கு இடையேயும் ஒர்க் பண்றேன் இல்லையா அது தான் பெரிசு. உன்னை மாதிரி மீட்டிங் மீட்டிங் ந்னு கூட்டம் போட்டு தூக்கமா போடறேன்’ ஜெயராஜ் தன் பங்குக்கு நடேசனை இழுத்தான்.
‘ஆரம்பிச்சுட்டீங்களா உங்க வேலையை ? ‘ ஸ்ரீநாத் இடையே நுழைந்தார்.
‘உங்களுக்கென்ன ஸ்ரீநாத். நீங்க மானேஜர். உங்களுக்கு வேலையே இல்லை. உங்களுக்கு மேலே இருக்கிறவங்க அனுப்பற மெயிலை உங்க டீமுக்கு ஃபார்வேர்ட் பண்ன வேண்டியது, அப்படியே டீம் மெம்பர்ஸ் கேக்கறதை மேலிடத்துக்கு பார்வேர்ட் பண்ண வேண்டியது. அது இல்லேன்னா டைரியை தூக்கிட்டு இங்கேயும் அங்கேயும் அலைய வேண்டியது. நாலுபேர் கூடற இடத்துல கான்ஃபரன்ஸ் போட்டு பீட்டர் வுடுறது. அதுக்கும் மேல ஏதாவது பண்ணணும்ன்னு தோணினா இரண்டு எக்ஸல் ஷீட் அனுப்பி வொர்க் அலோகேஷன் நிரப்ப சொல்லுவீங்க, தூக்கம் வரும்போ எட்டிப் பார்த்து ஸ்டேட்டஸ் கேப்பீங்க. ம்ம்…. மேலே போக போக வேலை கம்மியாயிட்டே போகும்’ நடேசன் ஜெயராஜை விட்டு விட்டு ஸ்ரீநாத்தை பிடித்தான்.
‘அந்த வெட்டிப் பேச்சை எல்லாம் விடுங்க.. "டுமாரோ சாஃப்ட்வேர்ஸ்" ல ஆள் எடுக்கறாங்களாம் தெரியுமா ? நல்ல பே தராங்களாம்’ ஸ்ரீநாத் பேச்சை திருப்பினார்.
‘ஆமா கேள்விப்பட்டேன். நம்ம கம்பெனில தான் சம்பளம் ரொம்பவே கம்மி. எரிச்சல் பட்டான்’ ஜெயராஜ
ஆமாடா. மத்த சாஃப்ட்வேர் கம்பெனில எல்லாம் நம்ம எக்ஸ்பீரியன்ஸ்க்கு கிடைக்கிற சம்பளமே வேற. நாலுவருஷமா ஒரே கம்பெனில இருக்கிறோம் வெறும் பத்தோ பதினஞ்சோ சதவித சம்பள உயர்வு குடுத்து அவமானப் படுத்தறாங்க. இதையே மத்த கம்பெனில எல்லாம் முப்பது நாப்பது சதவிகிதமாம். நடேசன் ஒத்து ஊதினான்.
ஆமா. என் கிளாஸ்மேட் ஒருத்தன் பெங்களூர்ல மிரர் சாப்ஃட்வேர்ஸ் ல இருக்கான். அவனுக்கு மாசம் அறுபதாயிரம் சம்பளமாம். நமக்கு அந்த அளவுக்கு வர இன்னும் எத்தனை வருசம் ஆகுமோ.
ஆமா. நாற்பதைத் தாண்டற வழியே காணோம். அதுலயும் முப்பது சதவிகிதம் டாக்ஸ் புடிச்சு உயிரை வாங்கறாங்க.
ஐயோ, அந்த டாக்ஸ் கதையை ஞாபகப் படுத்தாதே. வருஷத்துக்கு இரண்டு இலட்ச ரூபாய் டாக்ஸ்லயே போயிடுது. அவன் அவன் நாலு ஹோட்டல், ஐஞ்சு கம்பெனி வெச்சுட்டு வரிகட்டாம இருக்கான். அரசியல் வாதிங்களைப் பார்த்தா ஊரெல்லாம் பங்களா வாங்கித் தள்றாங்க, நம்மள மாதிரி மாச சம்பளம் வாங்கறவங்கன்னா உடனே வந்துடுவாங்க ஒரு ஆர்டரையும் தூக்கிக்கிட்டு. சே… டாக்ஸ் சேவிங்ஸ்க்காக ஊரெல்லாம் பாலிஸி வாங்கி, இப்போ அதுக்கு பிரீமியம் கட்ட வழியில்லாம அல்லாட வேண்டியதாயிருக்கு.
இந்த மார்ச் வரைக்கு வெயிட் பண்ணுவேன். இந்த தடவையும் நல்ல ஹைக் குடுக்கலேன்னா வேற கம்பெனி தேடறதா இருக்கேன்.
அதை நான் எண்ணிக்கோ டிசைட் பண்ணிட்டேன். ரெஸ்யூம் கூட ரெடி பண்ணிட்டேன். நாலு மாடல்ல. எந்த கம்பெனில எந்த போஸ்ட் க்கு கேக்கறாங்களோ அதுக்குத் தகுந்த மாதிரி ஒரு ரெஸ்யூம் அங்கே அனுப்பிட வேண்டியது தான்.
‘சரி அதை விடு. இன்னிக்கு மேட்ச் பாத்தியா ?’ ஸ்ரீநாத் பேச்சை திசைதிருப்புவதற்காவே இருப்பவர் போல புது கேள்வியைக் கேட்டார்.
ஸ்கோர் பாக்காம என்ன பண்ன சொல்றீங்க ? என்.டி.டி.வி ஸ்கோர் கார்ட் ஒண்ணு ஓடிட்டே இருக்கும் என்னோட சிஸ்டம்ல. அதுவும் போதாதுன்னு கிரிக் இன்போ டாட் காமையும், கிரிக்பஸ் டாட் காமையும் பத்து செகண்டுக்கு ஒரு தடவை ரிஃப்ரஸ் பண்ணிட்டே இருப்பேன். மாட்ச் நடக்கும்போ வேற வேலையே ஓடாது. ஜெயராஜ் சொன்னான்.
ஆமா. இல்லேன்னா மட்டும் வேலை வந்து குமியுதா என்ன ? ஏதோ கொஞ்சம் புராஜக்ட் டெஸ்டிங். அதுலயும் இரண்டு இஷ்யூ கண்டு பிடிச்சுட்டோ ம்னா போதும். அப்புறம் டெவலப்மெண்ட் டீம் அதை பிக்ஸ் பண்ணி நமக்கு கோடு தரதுக்கு கொஞ்ச நாள் ஆகும் அதுவரைக்கும் ஃபிரீ தான். டெஸ்டிங் டீம்ல இருக்கிறதுல இது ஒரு வசதி. என்ன டெவலப் பண்ணினாங்கன்னு பார்த்து டெஸ்ட் பண்ணினா போதும். அப்படியே நாம சரியா டெஸ்ட் பண்னலேன்னா கூட ஏதும் குடி முழுகிப் போயிடப் போறதில்லே. புரடக்ஷன் இஷ்யூ கொஞ்சம் வரும். அதை மட்டும் அப்புறம் டெஸ்ட் பண்ணினா போதுமே.
அடப்பாவி.. இப்படித்தான் உன்னோட வாழ்க்கை ஓடுதா ? நாங்க இங்கே டெவலப்மண்ட் டீம்ல இருந்து கஷ்டப்படறோம். நீ என்னடான்னா ஜாலியா வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கே. ஜெயராஜ் சிரித்தான்.
சிரிக்கிறதை நிறுத்து முதல்ல. உருப்படற வழியைப் பாரு. நல்ல கம்பெனி ஒண்ணை செலக்ட் பண்ணி டிரை பண்ணுவோம். இந்த கம்பெனில குப்பை கொட்டினது போதும். நாலு வருஷம் ஒரே கம்பெனில இருக்கிறேன்னு சொன்னா சிரிக்கிறாங்க.
அதுக்கு ஏன் டென்சனாகிறே. டிரை பண்ணுவோம். இப்போ தான் மார்க்கெட் நல்லா இருக்கே. நாம ஒரு நல்ல கம்பெனியைப் பார்த்து சேர்ந்துடலாம். நல்ல ஹைக் குடுக்கிற கம்பெனி எத்தனையோ இருக்கு.
அவர்களுடைய பேச்சு இருக்கும் கம்பெனியில் சம்பளம் குறைவு என்றும், புதிய கம்பெனி தேடவேண்டும் என்றும் நீண்டு கொண்டே இருந்தது. ஜெயராஜின் மனசுக்குள் இந்த கம்பெனியில் இருப்பது நல்லதல்ல, உடனடியாக வேறு ஒரு கம்பெனியில் சேரவேண்டும் என்னும் எண்ணம் ஆழமாகப் பதியுமளவுக்கு அவர்களுடைய உரையாடல் ஆழமானதாய் இருந்தது.
மாலை,
பல்வேறு சிந்தனைகளுடன் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தான் ஜெயராஜ்.
‘அண்ணா.. ஒரு குட் நியூஸ்….’ உற்சாகமாக துள்ளிக்கொண்டே வந்தான் அருள். ஜெயராஜின் தம்பி.
‘என்ன குட் நியூஸ் சொல்லு.. இவ்வளவு உற்சாகமா இருக்கே… ‘ ஜெயராஜும் உற்சாகமானான்.
அம்பத்தூர் எஸ்டேட்டில் ஒரு மெக்கானிக் கம்பெனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஜெயராஜின் தம்பி மூச்சு வாங்கிக் கொண்டே அண்ணனின் அருகே வந்து உட்கார்ந்தான். எனக்கு கம்பெனில சம்பள உயர்வு குடுத்திருக்காங்க. ஏழு சதவீதம். இரண்டு வருஷமா சம்பள உயர்வு கேட்டுட்டே இருந்தோம் இப்போ குடுத்திருக்காங்க. இனிமே மாசம் எனக்கு நாலாயிரத்து முன்னூறு ரூபாய் கிடைக்கும். முதுகு உடைய, உடம்பெல்லாம் வலிக்க வலிக்க செய்த வேலைக்கு இப்போ தான் பலன் கிடைச்சிருக்க
உற்சாகமாக சொல்லிக் கொண்டே போன தம்பியைப் பாத்ததும் ஏதேதோ தெளிவடைவது போல உணர்ந்தான் ஜெயராஜ்.



Courtesy:
Rahul Gandhi - Pune

No comments: